பாஜ வாஷிங்மிஷினில் சரணடைந்த இபிஎஸ்: ஸ்டாலின் கடும் விமர்சனம்
நாமக்கல் : ''டில்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள் தான் அடிபணிவார்கள்; தன்மானம் உள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பொம்மைகுட்டைமேட்டில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு மூலம், தமிழகத்தின் குரலை நசுக்க பார்க்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால், அது நமக்கு இழைக்கப்படும் அநீதி. ஆனால் அமித் ஷா, இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறார். நாங்கள் கேட்பது, லோக்சபாவில் பிரதமரின் உறுதிமொழி; எங்களுக்கு சட்டபூர்வமான உறுதிமொழி வேண்டும்.
பாஜவும் அதற்கு ஜால்ரா போடும் அதிமுகவும் ஏற்படுத்தியுள்ள பேராபத்து தான் இந்த லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு. அதற்கு எதிராக, கருப்புக்கொடி ஏற்றி விட்டோம். தமிழர்களுக்காக போராட யார் இருக்கிறார்கள் என நினைத்தார்கள். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். பிரதமர் மோடி அவர்களே, டில்லியின் ரிமோட் கன்ட்ரோலுக்கு அடிமைகள் தான் அடிபணிவார்கள்; தன்மானம் உள்ள தமிழர்கள் அடிபணிய மாட்டோம்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தங்கள் அரசின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியுமா? அவரது தலைமையிலான ஆட்சி, அவலமான ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. குட்கா விவகாரம் தொடங்கி டெண்டர் வரையும் ஊழல். துாத்துக்குடி துப்பாக்கி சூடு, பொள்ளாச்சி வன்கொடுமை என மக்கள் கதறினர். அதிமுக ஆட்சியே இவ்வளவு கேவலமாக இருந்தால், நேரடியாக பாஜ ஆட்சி வந்தால் என்ன ஆகும்?
மதவாதம் தலைதுாக்கும்; கலவரம் உண்டாகும். தமிழகத்தின் வளர்ச்சியை சிதைக்க பாஜ நினைக்கிறது. அதனால்தான், இந்த தேர்தலை 'தமிழ்நாடா, டில்லியா' என்று சொல்கிறோம். தவறுக்கு மேல் தவறு செய்த இபிஎஸ், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பாஜ என்ற வாஷிங் மிஷினில் சரண் அடைந்துவிட்டார்.
தனி மனிதர்களை விட, நமக்கு தமிழகம் தான் பெரிது. தமிழகத்தை சிதைக்க நினைக்கும் பாஜவையும், அதற்கு அடிமையாக இருக்கும் அதிமுகவையும் வேரோடு வீழ்த்த வேண்டும். அதற்கு திமுக மீண்டும் ஆட்சி அமைய வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்