பங்களாவை உடனே ஒப்படைக்க முடியாது: முன்னாள் அமைச்சர்கள் தடாலடி
சென்னை: 'அரசு பங்களாக்களை, உங்கள் இஷ்டப்படி ஒப்படைக்க முடியாது' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், முன்னாள் அமைச்சர்கள் தடாலடியாக கூறியுள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர்கள் தங்குவதற்காக 60 பங்களாக்கள் உள்ளன. இவற்றில் அமைச்சர்களின் அலுவலகம், குடியிருப்பு, பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., ஆட்சியில் 23க்கும் அதிகமான அமைச்சர்கள், இந்த பங்களாக்களை பயன்படுத்தி வந்தனர். தங்கள் சொந்த செலவில், கட்டில், மெத்தை, பிரிஜ், டிவி, ஏசி உள்ளிட்ட வசதிகளை, அமைச்சர்களின் குடும்பத்தினர் செய்து கொண்டனர்.
தோட்டங்களில் நாட்டுக்கோழி, பசுக்கள், பறவைகள், வெளிநாட்டு நாய்களை சில அமைச்சர்களின் குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். இந்த அரசு பங்களாக்கள், பொதுப்பணித்துறையினர் பராமரிப்பில் உள்ளன.
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததால், தி.மு.க., ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கு, பங்களாக்களை ஒதுக்க வேண்டியுள்ளது. எனவே, பங்களாக்களில் பெயின்ட் அடித்தல், கழிப்பறைகள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டனர்.
அதற்காக, பங்களாக்களை காலி செய்யும்படி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயகர் வாயிலாக, முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்துள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, துணை முதல்வர் பதவி இழந்த உதயநிதி ஆகியோரின் உதவியாளர்களுக்கும் இந்த உத்தரவு பறந்துள்ளது. இதை ஏற்று, பங்களாக்களை அனைவரும் காலி செய்வர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை, நேரடியாக நேற்று அழைத்து பேசிய ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள், இரண்டு மாதத்திற்கு பிறகே, பங்களாக்களை காலி செய்ய முடியும் என தடாலடியாக கூறியுள்ளனர்.
இது குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்களாக்களை காலி செய்வதற்கு இரண்டு மாதங்கள் வரை அவகாசம் வழங்குவது வழக்கம். ஆனால், உடனடியாக பங்களாவை காலி செய்யும்படி கூறியதால், முன்னாள் அமைச்சர்கள் கடும் கோபம் அடைந்து உள்ளனர்.
மேலும், அறைகளில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால், அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டி உள்ளது. எனவே, இரண்டு மாதங்கள் வரை பங்களா பக்கம் வந்து காலி செய்யும்படி தொல்லை செய்ய வேண்டாம் என தடாலடியாக கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை, முன்னாள் அமைச்சர்கள் குடும்பத்தினர் அனுப்பி வைத்து உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்