தி.மு.க.,வை முதுகில் குத்திய காங்கிரஸ்: பிரதமர் மோடி ஆவேசம்
பெங்களூரு: பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, வாழும் கலை அமைப்பின், 45வது ஆண்டு விழாவில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று பெங்களூரு வந்தார்.
மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்ததற்காக, கர்நாடகா பா.ஜ., சார்பில், பிரதமர் மோடிக்கு, எச்.ஏ.எல்., விமான நிலையம் அருகே பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அப்போது, மோடி பேசியதாவது: கர்நாடகா எப்போதும், பா.ஜ.,வுக்கு உத்வேக மையமாக இருந்து வருகிறது. பெரிய கட்சியாக இல்லாத நேரத்திலும், ஆட்சி செய்ய மக்கள் நமக்கு அனுமதி கொடுத்தனர். தென் மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு அதிக எம்.பி.,க்கள் கொடுத்ததில் கர்நாடகா முதலிடத்திலும், தெலுங்கானா மாநிலம், 2வது இடத்திலும் உள்ளன.
கடந்த மூன்று லோக்சபா தேர்தலிலும் காங்கிரசால், 100 இடங்களை கூட எட்ட முடியவில்லை. இருப்பினும், அக்கட்சி தலைவர்களுக்கு ஆணவம் குறையவில்லை. தங்கள் தோல்விக்கு ஒட்டுமொத்த உலகையும் குறை சொல்கின்றனர்.
தமிழகத்தில் புதிய கட்சியை ஆட்சி அமைய விடவில்லை என்று குறை கூறிய காங்கிரஸ் தலைவர்கள், கேரளாவில் ஏன் இன்னும் முதல்வரை தேர்வு செய்யவில்லை.
இரண்டு ஆண்டுக்கு ஒரு முதல்வரா அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு முதல்வரா என, அங்கு குழப்பம் உள்ளது. கர்நாடகாவிலும் இதே நிலைமையே. சித்தராமையா எத்தனை நாட்கள் பதவியில் நீடிப்பார் என்று தெரியாது.
ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் அரசால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர். கர்நாடகாவில் அரசு கருவூலம் கொள்ளையடிக்கப்படுகிறது. காங்கிரஸ் இப்போது ஓட்டுண்ணி கட்சியாக மாறி விட்டது.
தமிழகத்தை பாருங்கள். அங்கு அவர்கள், தி.மு.க.,வுடன், 30 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர். பல இக்கட்டான சூழ்நிலையில் காங்கிரசை, தி.மு.க., காப்பாற்றியது.
ஆனால், பதவி ஆசைக்காக புதிய கட்சியுடன் கூட்டணி வைத்து, தி.மு.க., முதுகில் குத்தி துரோகம் செய்து விட்டனர். தற்போது இன்னொரு கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்