சத்தியமூர்த்தி பவனில் தள்ளுமுள்ளு: கோபத்தில் கூட்டத்தை ரத்து செய்த ராகுல்
- நமது நிருபர் -
சென்னை சத்தியமூர்த்தி பவனில் உரிய வரவேற்பும் பாதுகாப்பும் அளிக்கப்படாததோடு, கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால், எரிச்சலடைந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஹோட்டலுக்கு பறந்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல் வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க, ராகுல் சென்னை வந்திருந்தார். பின், விஜயும் ராகுலும் தமிழக காங்., தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வர உள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், விஜய் வரவில்லை. ராகுல் மட்டும் வந்தார். அவரது உதவியாளர் அலங்கார் ஓட்டி வந்த காரில், தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், மாநில காங்., தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் வந்தனர்.
ராகுல் காரில் இருந்து இறங்கியதும், வளாகத்தில் இருந்த, சத்தியமூர்த்தி, கக்கன் சிலைகளுக்கு ராகுல் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாலை அணிவிக்கவில்லை.
அதற்கு முன்பே, கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர். ராகுலுக்கு ஆரத்தி எடுக்க மகளிர் அணியினர் தயாராக இருந்தனர். மாநில நிர்வாகிகள் சிலர், சால்வை அணிவிப்பதற்காக ஓடி வந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர், ராகுலை நெருங்கியபோது, அவருடன் வந்த தொண்டர்களும் நெருங்க, அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ராகுலின் உதவியாளர் பைஜு, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகியை, பாதுகாப்பு போலீஸிடம் சொல்லி அப்புறப்படுத்தினார்.
கட்டுப்பாடு இன்றி, முட்டி மோதிக்கொண்டு, கூட்டமாக திரண்டு, தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் வகையில், நிர்வாகிகளும் தொண்டர்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் ராகுல் கோபமுற்றார். தன்னை நெருங்கிய நிர்வாகிகளை ஆங்கிலத்தில் திட்டி விரட்டினார்.
பின் அலுவலகம் உள்ளே சென்று, காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநில தலைவரின் அறைக்கு சென்று, அங்கிருந்த எம்.பி.,க்கள், கோஷ்டி தலைவர்கள் சிலர் தந்த சால்வைகளை பெற்று கொண்டார்.
அங்கு அவருக்காகவே வாங் கி வைக்கப்பட்டிருந்த, தேநீர், 'நட்ஸ்' போன்றவற்றை சாப்பிடாமல் ராகுல் புறக்கணித்தார். கடுகடுப்புடனேயே இருந்த அவர், அங்கிருந்து சில நிமிடங்களிலேயே புறப்பட்டு, விமான நிலையத்திற்கு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு பறந்தார்.
ஹோட்டல் அறையில், த.வெ.க., அமைச்சரவையில் இடம்பெறும் எம்.எல்.ஏ.,க்கள் யார் யார் என்பது குறித்து, கட்சி மேலிட பொறுப்பாளர்களிடம் ராகுல் விவாதித்தார். சத்தியமூர்த்தி பவனில் நிகழ்ந்தது குறித்து, அவர்களிடம் கடிந்து கொண்டார்.
இதுகுறித்து, காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை வந்த ராகுலை வரவேற்க கட்சி கொடிகள் கட்டப்படவில்லை; மேளதாளங்கள் ஏற்பாடு செய்யவில்லை. தனக்கு அளித்த வரவேற்பில் ராகுல் திருப்தியடையா ததால், கோபமுற்றார்.
சத்தியமூர்த்தி பவனில் உள்ள ராஜிவ் அரங்கத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்காக 500 பேர் அமர்ந்திருந்தனர். மேடையில் ஒன்பது நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், ராகுல் அங்கு செல்ல விரும்பாமல், பாதியிலேயே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு வெளியேறினார்.
ஏற்கனவே இரண்டு முறை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த ராகுலுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தற்போது, அப்படியான வரவேற்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்