பா.ஜ., குறித்து தி.மு.க., பொய் பிரசாரம்; தினகரன் குற்றச்சாட்டு
கம்பம்: பா.ஜ., குறித்து தி.மு.க., பொய் பிரசாரம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம், கம்பம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜக்கையனை ஆதரித்து, கம்பத்தில் தினகரன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:மத்தியில் ஆளும் பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்றும், பிரதமர் மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றும், தி.மு.க., பொய் பிரசாரம் செய்து வருகிறது. இப்படி மாய பிம்பங்களை உருவாக்கியே, கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்றது.
ஹார்முஸ் நீரிணையை இந்திய கப்பல்கள் கடக்க, ஈரான் அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான், இந்தியாவை நட்பு நாடு என்று நேசக்கரம் நீட்டுகிறது. இஸ்லாமியர்களுக்கு பா.ஜ., எதிரி என்றால், ஈரான் நட்பு கரம் நீட்டுமா?
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரும் சட்டப் போராட்டம் நடத்தி அனுமதி பெற்றார். ஆனால், கேரளாவிற்கு அழுத்தம் கொடுத்தால், இங்கு கூட்டணி ஆட்டம் கண்டு விடும் என்பதால், முல்லை பெரியாறு பிரச்னையை தி.மு.க., கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து போனது. போதைப்பொருட்கள் நடமாட்டம் தாராளமாக உள்ளது.
நானும் இபிஎஸ்யும் திட்டி கொண்டோம் என்கின்றனர். வீடு என்று இருந்தால் அண்ணன், தம்பிக்குள் சண்டை வருவது சகஜம் தானே. இப்போது நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டோம். எனவே, மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். இவ்வாறு தினகரன் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்