தொழில், வர்த்தக பிரதிநிதிகளை சந்தித்து தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு திரட்டும் கோயல்
சென்னை: கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தொழில், வர்த்தக பிரநிதிகளின் சங்கத்தினரை, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார்.
தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளராக, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் உள்ளார். இவர், கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், இம்மாதம், 3ம் தேதி சென்னை வந்தார்.
தமிழகத்தில் முகாமிட்டு வரும் பீயூஷ் கோயல், முக்கிய நகரங்களில், தொழில் மற்றும் வர்த்தக சங்க பிரநிதிகளை சந்தித்து, மத்திய அரசு தொழில் துறையினருக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து விவரித்து வருகிறார்.கடந்த, 10ம் தேதி காலை கோவையில் தொழிலதிபர்கள், தொழில் வல்லுநர்களுடன் உரையாடினார். பின், ஈரோட்டில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன் இணைந்து, அம்மாவட்டத்தில் உள்ள வணிகர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூரில் உள்ள ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினருடன் கலந்துரையாடினார். நேற்று முன்தினம், மதுரையில் தமிழக வர்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கத்தின் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த கூட்டங்களில், ஜவுளி உள்ளிட்ட ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும், மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள், அவற்றின் சலுகைகள் உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக பீயூஷ் கோயல் எடுத்துரைத்துள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டளிக்குமாறும், தமிழக வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் அரசு அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்