Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கமல்ஹாசன் புகட்டியிருக்கும் அரசியல் பாடம்!

கமல்ஹாசன் புகட்டியிருக்கும் அரசியல் பாடம்!

- வேலங்குடி முரளி -newsteastall@gmail.com

'தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும் ஏற்புடையதாக இல்லை என்பதால், தேர்தலில் போட்டியிடவில்லை' என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரியது.

ஒரு சீட்டோ, இரண்டு சீட்டோ எது வேண்டுமானாலும் கொடுங்கள், அதுவும் தி.மு.க., சின்னத்திலேயே நிற்கிறோம் என்று அறிவாலயம் வாசலில் காத்துக்கிடக்கும் ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் பாராட்டுக்குரியவர் தான்.

'உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டுமானால், தேர்தலிலேயே போட்டியில்லை' என்று, சிரித்துக் கொண்டே நேரடியாக முதல்வரை சந்தித்து சொல்லிவிட்டு அறிக்கை விட்டிருப்பது கமல் ஹாசனின் தைரியத்தைத்தான் காட்டுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற நிபந்தனையை ஏற்காமல், தனித்த அரசியல் அடையாளத்தை பாதுகாக்க முயன்ற நிலைப்பாடாகவும் இதை சிலர் பார்க்கின்றனர்.

ஆனால், தேர்தலையே கைகழுவி விட்டு செல்லும் அவருக்கு, அவருடைய கட்சி மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலமாக அரசியலில் இருந்து ராஜ்யசபாவுக்கு சென்றதைவிட வேறு என்ன சாதித்துவிட்டார்?

கடந்த சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தோல்வியை தழுவியது முதலே, அரசியலில் இருந்து காததுாரம் ஓடிவிட்டார். இப்போது தேர்தலில் போட்டியில்லை என்று சொன்னதன் மூலம், அவரை நம்பி உடன் இருந்தவர்களுக்கும், 'டார்ச் லைட்' பிடித்த தொண்டர்களுக்கும் பெப்பே காட்டிவிட்டார்.

கமல் கட்சி ஆரம்பித்து ராஜ்யசபாவுக்கு சென்றுவிட்டார். சரி, அவருக்காக நின்றவர்கள் இப்போது ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆகாமல் நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர்.

'எனக்கும் கட்சிக்கும் டார்ச் லைட் ஒரு உணர்வு' என்று வசனம் பேசுகிறார். வெறும் உணர்வை மட்டும் வைத்து என்ன செய்வது? அதற்கு உயிர் கொடுக்க வேண்டாமா? தேர்தல் களத்தில் நின்று போட்டியிட்டால்தானே உணர்வு இருக்கும். அதை யார் வந்து செய்வார் என்று நினைக்கிறார்?

'தேர்தலில் என்னை மக்கள் தோற்கடிக்கவில்லை; அரசியல்தான் தோற்கடித்தது' என்று சொல்கிறார் கமல்ஹாசன். ஆமாம், உங்களைப் போன்ற செயல்பட தெரியாத, அரசியலில் மக்களுக்கு எதுவும் செய்ய தெரியாத அல்லது செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்களை அரசியல் இப்படித்தான் துரத்திவிடும். அதன்மீது பழியை போட்டு தப்பித்துக் கொள்ளாதீர்கள். தி.மு.க.,வை குற்றம் சொல்ல முடியாமல் இப்படியா காரணம் தேடுவது?

நீங்கள் அரசியலில் தோற்றுப் போனதற்கு காரணம் நீங்கள்தான். டார்ச் லைட் எறிந்து 'டிவி'யை உடைத்து தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் பேசிய நீங்கள், இன்று இருக்கும் இடம் எது? அதே தி.மு.க., அறிவாலயம் தானே? பிறகு எப்படி உங்களை மக்கள் நம்புவர்? சாரி, அரசியல் நம்பும்?

தி.மு.க.,வுக்கு எதிராக முன்பு கடுமையாக கருத்து தெரிவித்த நிலையில், உங்களின் தற்போதைய அரசியல் தொடர்புகள் வேறுபட்டதாக தோன்றுவது, அரசியல் நிலைப்பாட்டின் மீது கேள்விகளை எழுப்புகிறது. உங்களின் அரசியல் நிலைப்பாடும் கொள்கை மாற்றங்களும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை குறைவையே உருவாக்கியுள்ளது என்பதே நிதர்சனம்.

உங்களுடைய சுயநலத்தையும், அரசியலுக்கு நீங்கள் வந்த நோக்கத்தையும் தெளிவாகக் காட்டிவிட்டது இந்த தேர்தல். 'எனக்கு அரசியல் தொழில் அல்ல' என்கிறீர்கள். அப்படியானால் இத்தனை நாள் மக்களை முட்டாளாக்கி, ஓட்டு அறுவடை செய்து ஏமாற்றியுள்ளீர்கள். இத்தனை நாளும் மறைமுகமாக தி.மு.க.,வின் வெற்றிகளுக்கு உதவி, அதற்கு பரிசாக ராஜ்யசபாவுக்கு சென்றுவிட்டீர்கள்.

அரசியலுக்கு விருப்பப்பட்டு, மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே அரசியலும் கைவிடாது மக்களும் கைவிடமாட்டார்கள். அப்படி நீங்கள் இல்லை என்பதால் தான் இப்போது இந்த நிலைமை.

'ஆண்டவரே ஆண்டவரே' என்று உங்களை பின்தொடர்ந்தவர்கள் எல்லாம், இப்போது புலம்புவதை தவிர வேறு வழியில்லை. எத்தனை இளைஞர்களின் சக்தி வீணாகியுள்ளது. போன காலம் எல்லாம் திரும்பி வருமா? பதவிக்கு வந்து நல்லாட்சியை தரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்கள் ஆதரவாளர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

இனிமேலும் அரசியல் உங்களை காப்பாற்றாது. காலம் பேசியிருக்கிறது; காத்திருந்து பதில் சொல்லியிருக்கிறது. இதுபோன்ற அரசியல்வாதிகளை நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. மக்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

நடிகர்களை நம்பி பின்சென்றால் என்ன ஆகும் என்பதை கமல் ஹாசனும் மக்கள் நீதி மய்யமும் பாடம் புகட்டியிருக்கிறது. கடைசியாக, மக்கள் நீதி மய்யம் சார்ந்தோருக்குள் ஆறுதல் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.

Advertisement