Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கூட்டணி என்றாலே வருத்தம் ஏற்படுவது இயல்பு

 கூட்டணி என்றாலே வருத்தம் ஏற்படுவது இயல்பு

பா.ஜ., மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி, நம் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஐந்தாண்டுகள் எம்.எல்.ஏ., அனுபவம் மன நிறைவை தருகிறதா?


கட்சியின் பிரதிநிதியாக வெளியில் பேசுவதை விட, மக்கள் பிரதிநிதியாக சட்டசபையில் பேசுவதற்கு அதிக மதிப்பு இருக்கிறது. அரசை கேள்வி கேட்கும் அதிகாரம், மக்கள் பிரச்னையை தீர்க்க உதவுகிறது. அரசு நிர்வாகம் எப்படி இயங்குகிறது என்பதை நேரடியாக அறிந்துகொள்ள ஐந்தாண்டு எம்.எல்.ஏ., அனுபவம் உதவியது. மன நிறைவு அடைந்தேன் என்றால், ஒரு இடத்தில் நின்று விட்டது போலாகி விடும். அரசியல்வாதி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்க வேண்டும்.

ஐந்தாண்டுகளில் தொகுதிக்காக என்னென்ன செய்தீர்கள்?


எம்.எல்.ஏ., நிதி, சி.எஸ்.ஆர்., நிதி வாயிலாக, 18 இடங்களில் தினமும் 20 லிட்டர் குடிநீர் இலவசமாக வழங்கும் குடிநீர் ஏ.டி.எம்., மையங்கள் அமைத்துள்ளேன். 30 புதிய அங்கன்வாடிகள் கட்டப்பட்டுள்ளன.

'கோவை மக்கள் சேவை மையம்' அறக்கட்டளை வாயிலாக, 3,000க்கும் அதிகமான பெண்களுக்கு தொழில் பயிற்சி, குழந்தைகளுக்கு பால், சானிட்டரி நாப்கின், ஆண்டுக்கு, அப்பா இல்லாத 100 குழந்தைகளை தத்தெடுத்து உதவியது என, கோவை தெற்கு மக்களுக்கு நிறைய செய்திருக்கிறேன்.

கோவை வடக்கு தொகுதிக்கு மாறுவது ஏன்? அ.தி.மு.க., நிர்ப்பந்தமா?


கூட்டணி கட்சிகளின் கோரிக்கை, உள்ளூர் அரசியல் சூழல் போன்றவற்றை வைத்து, கட்சித் தலைமை ஒரு முடிவை எடுக்கும்போது, தேசிய மகளிரணி தலைவராக பரந்துபட்ட அனுபவம் உள்ள நான், அதை ஏற்கத்தான் வேண்டும். இது முழுக்க முழுக்க கட்சி எடுத்த முடிவு.

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, மத்திய பா.ஜ., அரசு அனுமதி மறுத்துள்ளது. இது, தேர்தலில் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?


கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ.,க்களிடம், தி.மு.க., அரசு கருத்து கேட்கவில்லை. மத்திய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட வேண்டும் என்பதற்காக, 2021ல் தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்த கோவை மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, அரைகுறையாக அறிக்கை தயாரித்துள்ளனர். இந்த உண்மைகள் கோவை மக்களுக்குத் தெரியும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமெடுக்கும்.

தேர்தலில் கொங்கு மண்டலத்தை வெல்ல, தி.மு.க., அனைத்து அஸ்திரங்களையும் கையிலெடுத்துள்ளது. அவற்றில் எதை பெரும் சவாலாக பார்க்கிறீர்கள்?


'கோவைக்கு அடிக்கடி வருகிறேன். நிறைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்' என முதல்வர் ஸ்டாலின் கூறினாலும், கோவை மீது தி.மு.க.,வுக்கு வன்மம் உள்ளது. எது நாடகம், எது உண்மை என்பது கோவை மக்களுக்குத் தெரியும். ஊழலின் அடையாளமாக உள்ள செந்தில் பாலாஜியை, கோவை போன்ற சுய தொழில்முனைவோர் நிறைந்த மாநகரத்திற்கு அனுப்பி, மக்களை அவமானப்படுத்துகிறது தி.மு.க.,

ஆளும் கட்சி குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதைத் தாண்டி, செந்தில் பாலாஜியால் கோவைக்கு எதுவும் செய்ய முடியாது. தங்கள் தொழிலுக்கும் வளர்ச்சிக்கும் யார் தேவை என்பதில் கோவை மக்கள் தெளிவாக இருப்பர். எனவே, தி.மு.க.,வை சவாலாகப் பார்க்கவில்லை.

எம்.எல்.ஏ.,வான உங்களிடம், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு போன்றோர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளீர்களா?


சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணி, மதுரை எய்ம்ஸ், பருத்தி இறக்குமதி என, அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைகளை, மத்திய அரசுடன் குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பேசி நிறைவேற்றி இருக்கிறேன். அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிப்பு ஏற்பட்டபோது, மத்திய நிதியமைச்சருடன், தொழில் துறையினர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன்.

மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும், தி.மு.க., கூட்டணி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் விமர்சனம் வைத்தபோது, பா.ஜ.,வின் நான்கு எம்.எல்.ஏ.,க்கள் சரியான முறையில் பதிலடி கொடுக்கவில்லையே ஏன்?


எம்.எல்.ஏ., என்றால் சட்டசபையில் எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பாக நான் பேச எழுந்தாலே, சபாநாயகர் அனுமதிக்க மாட்டார். மீறி பேசினாலும் சபை குறிப்பிலிருந்து நீக்கி விடுவார். சட்டசபை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, 'வானதி பேசியதை சபாநாயகரிடம் காட்டி, ஒப்புதல் பெற்ற பிறகே வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டார் சபாநாயகர் அப்பாவு. சட்டசபையில் நான் பேசிய வீடியோக்களை கூட தருவதில்லை.

அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க் களுடனும் நீங்கள் நட்போடு இருக்கிறீர்கள். தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க் களில், உங்கள் நண்பர்கள் யார்?


தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காமல், பிரச்னைகளை மட்டும் பேசுவதால் கட்சி வேறுபாடின்றி, என்னுடன் நட்பாக பழகுவர். நண்பர்கள் என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நான் பேசும்போது முதல்வர், அமைச்சர்கள் பலரும் உடனுக்குடன் எழுந்து பதில் சொல்வர். என்னை மடக்க வேண்டும், பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைப்பதாலும் இது நடக்கலாம். எது எப்படி இருந்தாலும், நான் பேசுவதை கவனிக்கின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை, தி.மு.க., - எம்.எல்,.ஏ.,க்கள் கூட என்னிடம் சொல்வர்; முடிந்ததை செய்து கொடுத்திருக்கிறேன்.

234 பேரில் சிறந்த எம்.எல்.ஏ., மற்றும் சிறந்த அமைச்சர் விருதை யாருக்கு கொடுப்பீர்கள்?


சில நேரங்களில் பா.ஜ.,வை கிண்டலடித்தாலும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்ணியமாக பதிலளிக்கக் கூடியவர். சட்டசபையில் தொடர்ந்து அமர்ந்து கவனிக்கக் கூடியவர். மூத்த அமைச்சர் துரைமுருகன் இருந்தால், சட்டசபை கலகலப்பாக இருக்கும். பா.ஜ.,வை கடுமையாக திட்டினாலும், வேல்முருகன் ஒரு எம்.எல்.ஏ.,வாக சிறப்பாக செயல்படக் கூடியவர். தி.மு.க.,வை பாராட்டுவதால் வேல்முருகனுக்கு அதிக நேரம் தருவர். அ.தி.மு.க., - எம்எல்.ஏ.,க்கள் கே.பி.முனுசாமி, ஏ.கே.செல்வராஜ் போன்றவர்கள் தங்களது கருத்துகளை சிறப்பாக எடுத்து வைப்பர்.

சட்டசபையில் கவர்னர் பல முறை அவமதிக்கப்பட்டார். அதை பா.ஜ.,வோ, கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வோ பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை ஏன்?


சட்டசபைக்குள் அவமதிக்கப்படும் போதெல்லாம், எங்கள் கருத்துகளை சொல்ல முயல்வோம். ஆனால், அனுமதி கிடைக்காது. கவர்னர் பேசியதையே சபாநாயகர் நீக்கும்போது, நாங்கள் எம்மாத்திரம். கவர்னர் என்பவர் தனிநபர் அல்ல. அரசியலமைப்பின் அந்தஸ்தை காப்பாற்றுவதற்காக எப்போதும் குரல் கொடுத்திருக்கிறோம்.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில், ஒரு சதவீதம் பெற்ற அ.ம.மு.க.,வுக்கு, 11 தொகுதிகள். கூட்டணியோடு 11 சதவீதம் ஓட்டுகள் பெற்ற பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகள். இது சரியான ஒதுக்கீடுதானா?


கூட்டணி என்றாலே அனைத்துக் கட்சிகளுக்கும் மன வருத்தம் ஏற்படுவது இயல்பு. பல மாநிலங்களில் பா.ஜ., சிக்கலை எதிர்கொள்கிறது. 2024 லோக்சபா தேர்தல் ஓட்டு சதவீதத்தை சொன்னால், அவர்கள், 2021 சட்டசபை கணக்கை சொல்கின்றனர். ஆனாலும் எல்லாரும் வெல்ல வேண்டும் என்பதுதான், எங்கள் கூட்டணியில் அனைவரது எண்ணமாக இருக்கிறது.

பா.ஜ.,வால் தனித்து, 3 சதவீதத்தை தாண்ட முடியவில்லை. கட்சியினரின் உழைப்பு போதாது என ஒப்புக்கொள்வீர்களா அல்லது பா.ஜ.,வின் கொள்கை தமிழகத்தில் வியாபாரம் ஆகாத ஒன்றா?


பா.ஜ., தொடர்ச்சியாக தனித்துப் போட்டியிடவில்லை. பா.ஜ., போன்ற நாட்டை ஆளும் தேசியக் கட்சியால், நாம் தமிழர் கட்சி போல பேச முடியாது. தமிழகத்தில் மாற்றத்தை விரும்புபவர்களில், குறிப்பிட்ட சதவீதம் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப்போடுகின்றனர்.

ஆனால், அவர்களால் ஒருபோதும் தனியாக ஆட்சிக்கு வர முடியாது. பா.ஜ., தொண்டர்களும் நிர்வாகிகளும் எப்போதும் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். மாநிலங்கள் வளர்ந்தால் தேசம் வளரும் என்பதுதான், பா.ஜ.,வின் கொள்கை. இதை தமிழக மக்களும் ஏற்பர்.

பா.ஜ.,வும் இப்போது இலவசங்கள், உதவி தொகை பார்முலாவுக்கு மாறி விட்டது. அப்போது, 'திராவிட மாடல்' வெற்றிகரமானது என எடுத்துக் கொள்ளலாமா?

இலவசமே கூடாது என பிரதமர் மோடி கூறவில்லை. பெண்கள், ஏழைகளுக்கு கொடுக்கும் இலவசங்களை பா.ஜ., எப்போதும் எதிர்த்ததில்லை. இலவசம் என்பது திராவிட மாடல் அல்ல. ஊழல், குடும்ப ஆட்சி, பிரிவினைவாதம் தான் திராவிட மாடல்.

அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கியது, கட்சிக்கு பலமா, பலவீனமா?


மாநில தலைவர் பொறுப்பில் அண்ணாமலை மிக சிறப்பாக செயல்பட்டார். பா.ஜ.,வில் தலைவர் பொறுப்பு என்பது, அது அமித் ஷாவாகவே இருந்தாலும் நிரந்தரம் கிடையாது. கட்சியை கட்டி வளர்த்த அத்வானிக்கும் குறிப்பிட்ட காலம் தான். கட்சியின் இந்த விதிகளை புரிந்து கொண்டவர்களுக்கு மாற்றங்கள் இயல்பு என்பது தெரியும். அடுத்த பொறுப்புக்காக அண்ணாமலையை கட்சி தயார் செய்து கொண்டிருக்கிறது.

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவராக, நாடு முழுதும் பயணம் செய்துள்ளீர்கள். தி.மு.க.,வினர் சொல்வது போல், மற்ற மாநிலங்களை விட தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதா?


வளர்ச்சியில் தமிழகம் தனியிடத்தை பிடித்துள்ளது. நீண்ட காலமாக காங்கிரஸ் உள்ளிட்ட ஊழல், குடும்ப கட்சிகள் ஆண்ட மாநிலங்கள் வளர்ச்சியில் பின்தங்கின. ஆனால், தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்றவை, துவக்கத்திலிருந்தே வளர்ச்சியில் இருந்த மாநிலங்கள். ஆனாலும், அடைய வேண்டிய வளர்ச்சியை தமிழகம் அடையவில்லை. அதற்கு தி.மு.க.,வின் ஊழல், குடும்ப ஆட்சியே காரணம்.

தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளனவா; காரணம் என்ன? மற்ற மாநிலங்களில் எப்படி சமாளிக்கின்றனர்?


தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கிய காரணம், சட்டம் - -ஒழுங்குதான். ஆனால், தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. ஒரு காலத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருந்த பீஹார், உ.பி., மாநிலங்களில் இப்போது சட்டம் - -ஒழுங்கு சிறப்பாக உள்ளது. பெண் போலீஸ், பிங்க் பஸ், பிங்க் கழிப்பறை போன்ற திட்டங் களை உ.பி., அரசு செயல்படுத்துகிறது.

தமிழகத்தோடு போட்டி போட்டு, உ.பி., போன்ற மாநிலங்கள் முன்னேறி வருகின்றன. ஆனால், சட்டம் - -ஒழுங்கில், முன்பு சமாஜ்வாதி ஆட்சியில் இருந்த உ.பி.,யை போல் இப்போது தி.மு.க., ஆட்சியில் தமிழகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement