'என் பெயர் சவுகத் அலி: சண்முக பாண்டியன் அல்ல'
விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க., பொதுச்செயலருமான பிரேமலதா, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் மூத்த மகனும், தே.மு.தி.க., இளைஞரணி செயலருமான விஜயபிரபாகர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபகாலமாக பிரேமலதா பேசும் கருத்துக்கள், தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, பிரசாரம் செய்த பிரேமலதா, 'திருப்பரங்குன்றம் மலை மீது முருகன் அருளால் தீபம் ஏற்றப்படும்' என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள், பிரேமலதாவையும், அவரது கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். வாய்தவறி பேசி விட்டதாக, பிரேமலதா தரப்பில் கூறப்பட்டாலும், அதை முஸ்லிம் சமூக தலைவர்கள் ஏற்பதாக இல்லை.
இந்நிலையில், விருத்தாச்சலம் தொகுதியில் மசூதிகளில், விஜயகாந்தின் இளையமகன் சண்முகபாண்டியன் பிரசாரம்செய்து வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:
முஸ்லிம்களுடன் எனது தந்தை விஜயகாந்த் நெருக்கமாக இருந்தார். அப்பாவின் நெருங்கிய நண்பர்களாக முஸ்லிம்கள் தான் உள்ளனர். எனக்கும் முஸ்லிம்களுடன் சின்ன வயதில் இருந்தே நெருக்கம் அதிகம். எனது இன்னொரு பெயர் சவுகத் அலி. முஸ்லிம்களுடன் உள்ள நட்பு காரணமாக எனக்கு சவுகத் அலி என, அப்பா பெயர் வைத்தார்.
கடந்த 2006 சட்டசபை தேர்தலில், அப்பாவை ஜெயிக்க வைத்த மாதிரி, அம்மாவையும் ஜெயிக்க வையுங்கள். ஒரு குடும்பத்தை பார்ப்பதுபோல, இந்த தொகுதியை எனது அம்மா பார்த்துக் கொள்வார். தொகுதி மக்களை தங்க தட்டில் வைத்து தாலாட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்