கோவையில் விஜய் பரப்புரை இல்லை? காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம்
கோவை: த.வெ.க., தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுார் பகுதியில் மாலை 4 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதற்கு முன் கோவை கருமத்தம்பட்டி பகுதியில் அவர் பொதுமக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், கோவை நகர மற்றும் மாவட்ட போலீசாரிடம் இதுவரை எவ்வித முன் அனுமதி கடிதமும் கட்சி சார்பில் சமர்ப்பிக்கப்படாததால், கோவையில் விஜய் பிரசாரம் செய்வதற்கு ஏதும் வாய்ப்பில்லை என போலீசார் தெரிவித்தனர்.
பொதுநிகழ்வுகளுக்காக குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்பே அனுமதி பெறுவது கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவை விமானநிலையத்தில் இருந்து செல்லும் விஜய் வாகனம், கருமத்தம்பட்டி வழியாக சற்று மெதுவாக செல்லக்கூடும் என்றாலும், பொதுமக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சி நடைபெறாது என கூறப்படுகிறது.
விஜயை நேரில் காணவும், அவரது பேச்சை கேட்கவும் காத்திருந்த கோவை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கோவை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. இந்த நிலையில் த.வெ.க.,க்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் மதிப்பிடப்படுவதால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் கோவை பிரசாரத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனவும் பேசப்படுகிறது.
மேலும், கோவை மாநகரம் தொழில்துறை மற்றும் நடுத்தர வர்க்க வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், இங்கு நேரடி பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கும்.
இதனை தவிர்த்தது, கட்சியின் உள்ளூர் அமைப்பின் பலம் குறைவாக உள்ளதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்