தேர்தலில் 'சீட்' கிடைக்காதவர்களை சமாதானப்படுத்திய பீயூஷ் கோயல்
- நமது நிருபர் -
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக முகாமிட்டிருக்கும் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பீயூஷ் கோயல், சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.,வில் போட்டியிட, 'சீட்' கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை சமாதானம் செய்து, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 3ம் தேதி மாலை, மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பீயூஷ் கோயல் சென்னை வந்தார். அப்போது தான், பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. ஏற்கனவே, பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் பெரும்பாலானவை, பா.ஜ., தரப்பில் கேட்கப்படாதவை.
சென்னை தி.நகர், வேளச்சேரி, பழனி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததை கண்டித்து, சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகம், மாவட்ட பா.ஜ., அலுவலகங்கள் முன், அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கும், அங்கு கட்சி பணிகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவோரை வேட்பாளர்களாக அறிவிக்காதது, நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, சீட் கிடைக்காத நிர்வாகிகளை பீயூஷ் கோயல் தொடர்பு கொண்டு, 'கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரின் வெற்றிக்கு, உங்களின் உழைப்பை கொடுக்க வேண்டும்' என கூறி, தேர்தல் பணிகளில் ஈடுபடுமாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்கும் பீயூஷ் கோயல் நேற்று, மயிலாப்பூரில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார்.
இன்று தமிழிசை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில், பீயூஷ் கோயல் பங்கேற்கிறார். பின், பா.ஜ., மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா வீட்டிற்கு சென்று, மதிய உணவு சாப்பிட திட்டமிட்டு உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்