தென்னை செழிக்க திட்டங்கள் உறுதி! அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு பேச்சு
மடத்துக்குளம்: ஒரு விவசாயியாக, விவசாயிகளின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்பேன்; பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ள கூட்டணிக்கு, விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என, அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு பேசினார்.
மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில், அ.ம.மு.க., சார்பில், சண்முகவேலு போட்டியிடுகிறார். இவர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மகேந்திரன், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உடுமலை ஒன்றிய கிராமங்களில் பிரசாரம் செய்த போது, அவர் பேசியதாவது:
மடத்துக்குளம் தொகுதியில் தென்னை விவசாயிகளின் பிரச்னையை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவில்லை. வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோயால், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றினர். அப்போதும் நிவாரணம் கூட தி.மு.க., அரசு வழங்கவில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அமைச்சர் மற்றும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ., வாக பணியாற்றிய போது, மத்திய அரசு உதவியுடன் திருமூர்த்திமலையில், தென்னை ஆராய்ச்சி மையம் கொண்டு வந்தேன். அம்மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபட்டேன். அம்மைய விரிவாக்கம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்க தமிழக அரசு பங்களிப்பில், மொடக்குப்பட்டி உள்ளிட்ட இடங்களில், அரசு கொள்முதல் மையம் அமைக்கப்பட்டது. இத்தகைய திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை; கண்துடைப்புக்காக திட்டங்களை அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்.
மத்திய அரசு உதவியோடு தென்னை விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஒரு விவசாயியாக இருந்து, அரசின் கவனத்துக்கு விவசாயிகளின் பிரச்னையை கொண்டு சென்று தீர்வு காண்பேன். குக்கர் சின்னத்துக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்