சாமானிய குடும்ப பெண்ணை வேட்பாளராக்கிய ஸ்டாலின்
அவிநாசி ஏப். 13-: அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளராக டாக்டர் கோகிலாமணி போட்டியிடுகிறார்.
சேவூரில் 'நம்ம தொகுதி.. நம்ம ஊர் பொண்ணு' என்ற தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க. - எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது:
சாதாரண குடும்பத்தில் இருந்து படித்து மருத்துவராகி இப்போது வேட்பாளராக வந்திருக்கும் கோகிலாமணி தோற்றத்திலும் சாதாரணமாக உள்ளார். வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் போல இல்லாமல் எளிமையாக உள்ளார்.
தகுதி வாய்ந்த அனுபவம் பெற்ற எத்தனையோ பேர் இருந்தபோதிலும் கூட முதல்வர் ஸ்டாலின் உங்களில் ஒருவராக இருக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
கொரோனா பேரிடர் காலத்தில் பதவியேற்ற முதல்வர் ஸ்டாலின் துன்பத்தில் வாடிய மக்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கினார். விடியல் பயணம் திட்டத்திற்கு முதல் கையெழுத்திட்டார்.
அதற்கான தொகையை உங்கள் சகோதரனாக முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து துறைக்கு வழங்கி வருகிறார். அதனால் அது இலவச பயணமாகாது. இதுவரை விடியல் பயணத்தில் 90 லட்சம் முறை பெண்கள் பயணித்துள்ளார்கள்.
அன்றாடம் தங்கள் தேவைகளுக்கு போதிய பணம் இன்றி தவித்த பெண்களுக்கு அவர்களது துன்பத்தை போக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி உள்ளார். தேர்தல் காரணம் காட்டி அதையும் முடக்கப் பார்த்தார்கள்.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக மூன்று மாத தொகையுடன் 2000 சேர்த்து 5000 ரூபாய் ஆக வழங்கினார்.
இதுபோல பல மக்களுக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி உள்ளார்.
உங்கள் ஊரில் உங்கள் வீட்டுப் பெண்ணாக எளிய மகளாக இருக்கும் கோகிலாமணிக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என உங்கள் முன் கையேந்தி வந்திருக்கிறேன்.
இவ்வாறு தி.மு.க.எம்.பி. திருச்சி சிவா பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்