தமிழ் சமுதாயம் இனியும் ஏமாற கூடாது; சீமான் எச்சரிக்கை
திருப்புத்தூர்: ''உலகிற்கே அறிவை ஊட்டிய தமிழ் சமுதாயம் இனியும் ஏமாறக் கூடாது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:உலகின் பல நாடுகள் ஓரிரு வளங்களை மட்டுமே வைத்து கொண்டு கல்வி, பொருளாதார, சுகாதார, போக்குவரத்து, தொழில் துறைகளில் வளர்ச்சி பெற்றுள்ளன. அனைத்து வளங்களையும் கொண்டிருந்தாலும், நம் நாடு மட்டும் ஏன் பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டத்தால் தவிக்கிறது. இந்த நிலையை மாற்றத்தான் நாங்கள் போராடி வருகிறோம்.
எங்கள் கருத்தை நான் சொல்லும்போது, சீமான் கற்பனையாக பேசுகிறார்; சாத்தியம் இல்லாததை பேசுகிறார் என்கிறார்கள். என் நாட்டை உயர்ந்த நாடாக மாற்ற முடியும்; வாழ்விடங்களிலேயே அரசு வேலை வாய்ப்பு உருவாக்க முடியும் என, நான் சொல்வது வியப்பாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
தமிழகம் முழுவதும் அனைத்து வகை நிலங்களிலும் சணலை பயிரிட முடியும். இதில் இருந்து எடுக்கப்படும் நுால், பருத்தியை விட வலிமையானது. சணல் சுற்றுச்சூழலுக்கு உகந்தது; மக்கும் தன்மையும் கொண்டது. ஒரு ஏக்கரில் நடவு செய்யப்படும் சணல் பயிர், ஆண்டுக்கு 75,000 கிலோ கார்பனை பூமியில் இருந்து நீக்குகிறது.
மற்ற நாடுகளை போல, படித்த இளைஞர்களை வேளாண்மை துறையில் ஈடுபடுத்தலாம். இதை அரசு பணியாக்கி, நிலங்களை அரசு தன்னகப்படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். வேளாண்மை என்பது தொழில் அல்ல; அது வாழ்வியல் முறை. வேளாண்மையை அரசு பணியாக்கினால், வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்ல வேண்டியதில்லை.
உங்கள் ஓட்டு, மக்களை ஏமாற்ற நினைப்பவர்களுக்கா, மாற்ற நினைப்பவர்களுக்கா என்பதை, இந்த தேர்தலில் முடிவெடுங்கள். ரூ.8,000 டோக்கன், ரூ.10 ஆயிரம் ரொக்கம் வேண்டுமா அல்லது நாட்டை மாற்ற நினைப்பவர்கள் வேண்டுமா என முடிவெடுங்கள். உலகிற்கே அறிவை ஊட்டிய தமிழ் சமுதாயம் இனியும் இலவசங்களுக்காக ஏமாறாது என நம்புகிறேன்.இவ்வாறு சீமான் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்