தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் மேம்பட வேண்டும்: அண்ணாமலை
கோவை: ''மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை தேர்தல் கமிஷன் சரியாக செயல்படுத்த தவறிவிட்டது,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை - கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியில் நேற்று ஓட்டளித்த பின், அவர் அளித்த பேட்டி: கடந்த 3 நாட்களாக கோவை தெற்கு உட்பட, கோவை மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடந்துள்ளது. ஒரு கிராம் தங்க தோடு கொடுத்துள்ளனர்; கோவில்களில் வைத்தும் பணம் கொடுத்துள்ளனர். இவற்றை கண்காணிக்க தேர்தல் கமிஷன் மேற்கொண்ட பணிகள் போதுமானதாக இல்லை.
கோவை தெற்கு தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், பண விநியோகத்தை எதிர்த்து போராட்டமே நடத்தியுள்ளார். பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தவறி விட்டது. தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வரும் முன்பே, இதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை சரியாக செயல்படுத்த தேர்தல் கமிஷன் தவறி விட்டது. அதன் செயல்பாடுகள் மேம்பட வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஜனநாயகம் தான் எப்போதும் வெற்றி பெறும்; பணம் எப்போதும் வெற்றி பெறாது.
நான், த.வெ.க., தலைவர் விஜய் 'காஸ்ட்யூமில்' வரவில்லை. வெள்ளை சட்டை, காக்கி பேன்ட் என, நான் ஏற்கனவே அணிவதுண்டு. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த 'காஸ்ட்யூமில்'தான் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்