காங்., வேட்பாளர் பட்டியலில் மேலுார் 'மிஸ்ஸிங்' தலைவர்கள் 'மல்லுக்கட்டு' எதிரொலியா
மதுரை: நீண்ட இழுபறிக்கு பின் நேற்று 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்.,கில் 27 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது. மதுரை மாவட்டம் மேலுார் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக அக்கட்சியினர் கூறியதாவது:
மேலுார் தொகுதியில் 2021 சட்டசபை தேர்தலில் தற்போதைய எம்.பி., மாணிக்கம் தாகூரின் உறவினர் ரவிச்சந்திரன் போட்டியிட்டு தோல்வியுற்றார். அத்தொகுதி அ.தி.மு.க., வுக்கு சாதகம் என்பதால் இம்முறை நகர் பகுதியில் வடக்கு தொகுதியை பெற்றுவிட வேண்டும் என காய் நகர்த்தினார். அதை சிட்டிங் எம்.எம்.ஏ.,வான நகர் செயலாளர் தளபதிக்கு மீண்டும் தி.மு.க., ஒதுக்கியது.
ஆனால் 'இத்தொகுதியை காங்.,க்கு ஒதுக்க கோரி தேசிய தலைவர் கார்கே வரை பேசுவேன்' என மாணிக்கம் தாகூர் 'கறார்' காட்டினார். ஆனால் தி.மு.க., அதற்கு 'செக்' வைத்துவிட்டது. 28 தொகுதிகள் அறிவிப்பில் மேலுார் இடம் பெற்றதால் அங்கு போட்டியிட மாநிலத் தலைவர் ஆதரவாளரான மேலுாரை சேர்ந்த காங்., மனித உரிமை கழக மாநில தலைவர் மகாத்மா சீனிவாசன் முயற்சித்தார். அதேநேரம் காங்., மூத்த தலைவர்கள் சிலர் ஆதரவாளர்களான காங்., ஓ.பி.சி., பிரிவு நிர்வாகி நித்யபிரியா, சிவகங்கை சி.ஆர்.சுந்தரராஜன், முன்னாள் இளைஞரணி நிர்வாகி மேலுார் ராம்சுந்தர் வேட்பாளராக்க முட்டி மோதினர்.
தமிழக காங்., தலைவர்களுக்குள் ஒற்றுமையின்றி இந்த மோதல் போக்கு கடைசி நிமிடம் வரை நீடித்ததால் வேட்பாளர் பட்டியலில் இருந்து மேலுார் கழற்றிவிடப்பட்டுள்ளது. இது தனியாக அறிவிக்கப்படும் என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்