திருப்பூர் தெற்கு: போட்டி கடுமையாகிறது தி.மு.க. - பா.ஜ. மல்லுக்கட்டு
திருப்பூர்:திருப்பூர் தெற்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளருக்கு ஆதரவாக ஹிந்து முன்னணியினர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதால், தி.மு.க. - பா.ஜ. இடையே போட்டி கடுமையாகியுள்ளது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ் போட்டியிடுகிறார். நாளை தேர்தல் பணிமனை திறந்து விட்டு, மனு தாக்கல் செய்ய உள்ளார். இதில், பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்தனர். ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் மகனான தங்கராஜூக்கு, தற்போது, ஹிந்து முன்னணியை சேர்ந்தவர்களும் பிரசார களத்தில் உதவியாக இறங்க உள்ளனர். கட்சியினரை தவிர்த்து, பூத் வாரியாக ஹிந்து முன்னணியினர் வேலை செய்ய உள்ளனர். ஒவ்வொரு வீடாக சென்று தி.மு.க. வுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர்.
கடந்த முறை தேர்தலில் இத்தொகுதியில், தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட செல்வராஜ் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றார். இந்த முறை தான் தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேயர் தினேஷ்குமார், இம்முறை எளிதாக வெல்லலாம் என்று திட்டமிட்டிருந்தார். இருப்பினும், ஹிந்து முன்னணியினரும் பா.ஜ. வேட்பாளருக்கு ஆதரவாக களம் காண்பதால் போட்டி கடுமையாகியுள்ளது.
இதற்கிடையே தி.மு.க.வினர் கூறுகையில், ''பா.ஜ.வுக்கு ஆதரவாக ஹிந்து முன்னணி களம் கண்டாலும் அதுகுறித்து எங்களுக்கு கவலையில்லை; தி.மு.க.தான் வெற்றிபெறும்'' என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்