சொகுசு வாழ்க்கையை விட்டு விஜய் இறங்கி வரவில்லை: பா.ஜ.,
தமிழக பா.ஜ., செயலர் வினோஜ் செல்வம் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலில், உங்கள் பெயர் இடம்பெறாதது ஏன்?
பா.ஜ.,வில், 90 சதவீத நபர்கள், தேர்தல் கணக்கை மனதில் வைத்து பணியாற்றுவதில்லை. கட்சி வளர்ச்சிக்காக வேலை செய்கின்றனர். நிர்வாகிகளாகிய எங்களுக்கு என்ன பணி என்று பார்த்து ஒதுக்குகின்றனர். அதை சிறப்புடன் செய்கிறோம். நாம் செய்யக்கூடிய வேலைகளுக்கான உயர்வு என்பது, சரியான நேரத்தில் கிடைக்கும்.
யார் வேலை செய்தாலும், அவர்களுக்கான பதவி உயர்வு, கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். நான் உட்பட எந்த ஒரு நிர்வாகியும், சீட் கொடுப்பர் என்று வேலை பார்ப்பது கிடையாது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உங்களுக்கு தொகுதியை கொடுக்க முன்வந்தும், அதை வாங்க பா.ஜ., தலைவர்கள் மறுத்தது உண்மையா?
தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது என்பது பழனிசாமிக்கும் பா.ஜ., தலைவர்களுக்கு மட்டும் தெரியும். தனிநபருக்கு சீட் வழங்க கூடாது என்ற எண்ணம் கொண்ட தலைவர்கள், பா.ஜ.,வில் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய் பின்னால் இளைஞர்கள் அதிகம் செல்லும்போது, உங்களை போன்ற இளைஞர்களுக்கு பா.ஜ.,வில் சீட் வழங்காதது குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?
விஜய் கட்சியை, பா.ஜ.,வுடன் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. எங்கள் கட்சி பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் இருக்கிறது. அரசியல் என்பது வியாபாரம் அல்ல; சேவை.
அரசியலுக்குள் வந்து பார்க்கும்போது தான் கஷ்டங்கள், தியாகங்கள் தெரியும். 'சொகுசு வாழ்க்கை உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன்' என்று விஜய் கூறுகிறார். ஆனால், அவர் சொகுசு வாழ்க்கையை விட்டு கீழே இறங்கி வரவில்லை.
சென்னையில் இருந்து டில்லி சென்று, சென்னை திரும்ப வர, விமான டிக்கெட் விலை, 16,000 ரூபாய். ஆனால் விஜய், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து, தனி ஜெட்டில் செல்கிறார். இது, சொகுசு வாழ்க்கை.
சொகுசு வாழ்க்கையின் உச்சமாக பனையூர் பங்களாவில் வசிக்கிறார்; 'கேரவன்' வாகனத்தில் அமர்ந்து பேசுகிறார். அவரது கட்சிக்கு, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை எப்படி கண்டுபிடித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். யாரெல்லாம் வந்தனரோ, அவர்களுக்கு சீட் தந்தனர்.
தேர்தலில் போட்டியிட, பா.ஜ.,வில் எனக்கு ஏற்கனவே இருமுறை வாய்ப்பு கொடுத்தனர். அதுவும், தி.மு.க.,வில் மிகவும் பலம் வாய்ந்த சேகர்பாபு, தயாநிதி போன்றவர்களை எதிர்த்து. என்னை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். கட்சி பணியில் எனக்கு சலிப்பும் இல்லை; எங்கள் கட்சிக்குள் சலசலப்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

மேலிட உத்தரவு படி லாட்டரி சீட்டு விற்பனையாளர் மார்ட்டின் குடும்பம் அவரை அழைத்து வந்துள்ளது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.