விஜய் எங்கள் வீட்டு பையன்; சொல்கிறார் தே.மு.தி.க., பிரேமலதா
விருத்தாசலம்: 'தி.மு.க., தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் தொடர்கிறோம்' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்து உள்ளார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற பிரேமலதா, விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியாவிடம், வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
பின், பிரேமலா அளித்த பேட்டி:
என் வெற்றியை, என் கணவர் விஜயகாந்த், இறைவன் விருத்தகிரீஸ்வரர் மற்றும் தொகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தொகுதியை முன்னேற்ற பாடுபடுவேன். மத சார்பற்ற கூட்டணிக்கும், ஸ்டாலினுக்கும் நன்றி. தி.மு.க., ஆட்சி அமைத்து இருந்தால், நான் சொன்னதை விட அதிகமாக நிறைவேற்ற முடியும். எனினும், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.
நாங்கள் மத சார்பற்ற கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக சட்டசபைக்கு செல்கிறேன். ஸ்டாலினை சந்தித்து பேசுவேன். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், எங்கள் வீட்டுப் பையன், அவருக்கு வாழ்த்துக்கள். புதிதாக அமையும் த.வெ.க., ஆட்சிக்கு மனதார வாழ்த்துக்கள். விஜய் எங்களுக்கு புதிது அல்ல, விஜயகாந்துடன் வாழ்ந்தவர், எங்கள் பக்கத்து வீடு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்