Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தவெக வெற்றி பெறாது என்பது விஜய்க்கே தெரியும்: சொல்கிறார் திருமாவளவன்

தவெக வெற்றி பெறாது என்பது விஜய்க்கே தெரியும்: சொல்கிறார் திருமாவளவன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நன்னிலம்: இந்த சட்டசபை தேர்தலில் விஜயும், அவரது கட்சியும் வெற்றி பெறப்போவதில்லை. இது விஜய்க்கே தெரியும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

நோக்கம்

நன்னிலம் தொகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: திமுக அணியை வீழ்த்துவதற்கு அதிமுக பாஜவால் முடியாது. இதனால் அவர்கள் செய்த தந்திரமாக விஜயை தனித்து இறக்கிவிட்டுள்ளனர். இங்கு இரண்டே பேருக்கு தான் போட்டி என விஜய் சொல்கிறார். திமுகவை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் அவரது ரசிகர்களை திமுகவுக்கு எதிராக ஓட்டுப்போட வேண்டியதுதான் விஜயின் நோக்கம்.

ஏன் திமுகவை வெறுக்கிறார்? திமுக மீது என்ன வெறுப்பு? கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகள் ஆகவில்லை. திமுகவுக்கு எதிராக உள்ள மற்ற கட்சிகளுக்கு எதிராக வெறுப்பை பரப்பவில்லை.

ஆனால், அனைத்து மேடைகளிலும் திமுகவுக்கு எதிராக பேசுகிறார். அவர் திமுகவை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வர முடியமா? விஜயால் ஆட்சிக்கு வர முடியுமா? விஜயால் முதல்வராக முடியுமா? அந்த நாற்காலியில் அமர முடியுமா? முடியாது என்பது அவருக்கே தெரியும். நமக்கும் தெரியும்.

முடியாது

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற முடியுமா என அவருக்கு சந்தேகம். இதனால், இரண்டு தொகுதிகளில் நிற்கிறார். கொளத்தூர் போதும் என்கிறார் ஸ்டாலின். எடப்பாடி போதும் என்கிறார் இபிஎஸ். ஆனால் விஜய் இரண்டு தொகுதிகளில் நிற்கிறார். ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார். அவரால் வெற்றி பெற முடியாது. அவரால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாது.
பிறகு யாரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதற்கு திமுகவுக்கு எதிராக வெறுப்பை பரப்புகிறார்?. இந்த கூட்டணியை தோற்கடிக்க ஏன் விரும்புகிறார்? அதிமுக, பாஜவை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க விரும்புகிறார்.

சினிமா மோகம்

ஹீரோ மயக்கத்தில், சினிமா மோகத்தில் அந்த பக்கம் ஓட்டுப்போட்டாலும் வெற்றி பெறப்போவதில்லை. தமிழகத்தில் தவெக வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை. வாய்ப்பு கிடையாது. அப்புறம் ஏன் ஓட்டுக்களை பிரிக்கிறார். அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் ஓட்டு ஒன்று கூட அதிமுக அணிக்கு போகாது. இதுவரை அப்படிதான் உள்ளது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர் வெற்றி வருவதை தடுக்க திட்டமிட்ட பாஜ, முஸ்லிம், கிறிஸ்தவர் ஓட்டுகளை எங்களால் வாங்க முடியாது. நீ எங்களையும், திமுகவையும் திட்டினால், திமுகவுக்கு செல்லும் ஓட்டுகளில் ஒரு பகுதி பிரிந்து விடும் என்பது திட்டம்.

திட்டம்

முதல்முறை வாக்காளர்களுக்கு வெறும் சினிமா மோகம் தான். அரசியல் தெரியாது. திருமாவளவன் யார் என்று தெரியாது. நாம் செய்த தியாகம் தெரியாது. மதசார்பின்மை, சமூக நீதி, அரசியலமைப்பு சடடம் என்றால் என்னவென்று தெரியாது. சினிமா மோகத்தால் ஓட்டுப்போடுவான் என்று தனித்து நிற்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் அவர் பின்னால் சென்று ஓட்டு சேகரிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இதுதான் மோடி, அமித்ஷாவின் திட்டம். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement