பெரம்பூருக்கு விஜய் 'திடீர்' விஜயம்; 'விசில்' கோலம் போட்டு பிரசாரம்
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள த.வெ.க., தேர்தல் பணிமனையில், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று 'விசில்' கோலம் வரைந்தார்.
த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூரில், த.வெ.க., தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டுள்ளது.
இது நாள் வரை, அந்த பணிமனைக்கு விஜய் செல்லாததால், தேர்தல் பணிகள் சுணக்கமாக நடந்து வந்தன.
இதையறிந்த விஜய், தேர்தல் பணிமனைக்கு நேற்று சென்று பார்வையிட்டார்; கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பணிமனை முன், பெண்களுடன் இணைந்து, தன் கட்சியின் 'விசில்' சின்னத்தை விஜய் கோலமாக போட்டார்.
தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது, வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போடுமாறு விஜய் சொன்ன தகவல், கட்சியினர் மத்தியில் போய் சேராத நிலையில், விசில் சின்னத்தை தானே கோலமாக போட்டுள்ளார்.
இதற்கிடையே, தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில், நாளை விஜய் பிரசாரம் செய்கிறார்.
பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கக்கோரி, தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளதாக, த.வெ.க., டெல்டா மண்டல கண்காணிப்பாளர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து, கிழக்கு தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் விஜய் சென்று ஓட்டு சேகரிக்க உள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்