மே.வங்கத்தில் கருத்துக்கணிப்பு முடிவை வெளியிட மாட்டோம்: ஆக்சிஸ் மை இந்தியா அறிவிப்பு
புதுடில்லி: தமிழகத்தில் தவெக 98 முதல் 120 வரை இடங்களை பிடிக்கும் என Exit Poll வெளியிட்ட ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், மேற்கு வங்கத்துக்கு Exit Poll வெளியிடப்போவதில்லை என அறிவித்துள்ளது.
பாஜவுக்கு சாதகம்
மேற்கு வங்கத்தில் நேற்று 2ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பிறகு, நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. மேற்கு வங்கத்தில் நடந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, இந்த முறை பாஜ நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன.
ஆனால், கருத்துக்கணிப்பு நடத்தும் நிறுவனங்களில் முக்கியமானதான ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம், புதுச்சேரி, கேரளா, அசாம், தமிழகத்திற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தவெக 98 முதல் 120 தொகுதிகளை கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கு வங்கத்திற்கான முடிவை மட்டும் வெளியிடவில்லை.
சவால்
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 7 நாட்களில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகள் அனைத்திலும் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டது. 80 பேர் கொண் 16 குழுவினர், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முறைகளைப் பயன்படுத்தி வாக்காளர் நேர்காணல்களை நடத்தினர்.
ஆனால், இப்பணி வழக்கத்திற்கு மாறாக சவாலை ஏற்படுத்தியது. ஏராளமானோர் பதிலளிக்க மறுத்துவிட்டனர். ஆய்வுக்கு அணுகிய வாக்காளர்களில் சுமார் 70% பேர் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துவிட்டனர். கருத்துக்கணிப்பில் அதிகம் பேர் பதிலளிக்காதது, ஓட்டு பகிர்வில் நம்பகத்தன்மையை பாதிக்கிறது.
முடிவு
கடுமையான போட்டி நிறைந்த தேர்தல் களத்தில், மவுன வாக்காளர்கள் மற்றும் கட்டுப்பாட்டுடன் பதில் அளிப்பது போன்றவற்றால், ஏற்படும் மாற்றங்கள் மிக அதிகம். இதனால், பெறப்படும் கருத்தக்கணிப்புளில் நம்பகத்தன்மையையும் பாதிக்கிறது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பையும் வெளியிட தயாராக இருந்தோம். ஆனாலும், ஆய்வின்தரம், பதில்கள் மற்றும் கருத்துக்கணிப்பின் நம்பதகத்தன்மை குறித்த ஆய்வுக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிடுவதை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
கருத்துக்கணிப்பின் வெளிப்படைத்தன்மை மற்றும் தரவுகளின் நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கான எங்கள் கொள்கைக்கு இணங்க, புள்ளிவிவர நம்பகத்தன்மைக்கான எங்கள் உள் வரம்புகளைப் பூர்த்தி செய்யாத கருத்துக்கணிப்பை வழங்குவதை விட, வெளியீட்டை நிறுத்தி வைப்பதே மிகவும் பொறுப்பானது என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்