அமலாக்கத்துறை ரெய்டு வந்ததும் மோடியை டில்லிக்கு தேடிச்சென்று சந்தித்தவர் ஸ்டாலின்: சீமான்
ராமநாதபுரம்: அமலாக்கத்துறை ரெய்டு என்றதும் டில்லிக்கு தேடிச் சென்று மோடியை சந்தித்தவர் ஸ்டாலின் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.
ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த சீமான் பேசியதாவது:
திமுக-அதிமுக இரு கட்சிகளுமே, ஜாதி, மதத்தை வைத்து வெற்றி பெறுகின்றன. கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் எல்லாம் திமுகவுக்கு ஓட்டளிப்பதாக கூட்டு சேர்ந்து அறிவிக்கின்றனர். திமுக ஆட்சியில் குறைகள் இருந்தாலும், அவர்களால் தான் பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்கின்றனர்.
திமுக தான் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு என்றால் அல்லா பாதுகாக்க மாட்டாரா; இயேசு பாதுகாக்க மாட்டாரா? திமுக தலைமை ஒரு கோழை; ஒன்றுக்கும் உதவாத 22 கட்சிகளை கூட்டணி சேர்த்து தேர்தலில் நிற்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக-பாஜ ரகசிய உடன்பாடு வைத்துள்ளது என்று கூறியுள்ளார். 'நிடி ஆயோக்' கூட்டத்திற்கு டில்லி செல்லாத முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத் துறை ரெய்டு என்றவுடன், பிரதமர் மோடியை தேடிச் சென்று சந்தித்தார்.
இவ்வாறு அவர் பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடந்த பிரசாரத்தில் சீமான் பேசியதாவது:
ஒரு தொகுதிக்கு 30 கோடி ரூபாய் செலவு செய்யும் நபர், சேவை செய்ய மாட்டார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு, அவர்களால் விலையை நிர்ணயிக்க முடியவில்லை; கடனில் சாகின்றனர். தமிழகத்தில் கரும்பு, நெல் இல்லையா? பொங்கல் பண்டிகைக்கு, குஜராத்திலிருந்து இவற்றை கொண்டு வந்து நமக்கு கொடுக்கின்றனர். காரணம், கமிஷன்.
தமிழர்களுக்கு வரலாறு உண்டு. ஆனால், திராவிடர்களுக்கு வரலாறு இல்லை. அவர்கள் திருடர்கள்; தமிழர்களின் வரலாற்றை திருடுகின்றனர். எனவே தான் திருட்டு திராவிடம் என்கிறோம். ஒரு குடும்பத் தலைவன் கடன் வாங்கிவிட்டு செத்தால், கடன்காரன் மகன், மகள் என்கிறோம்; 10.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியவர்களை என்ன சொல்வது?
திமுக என்பது குடும்ப சொத்து, அது நிறுவனமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மகன் என்ற தகுதியைத் தவிர ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. இங்குள்ள பிரச்னைகளை கேட்காமல், 'உன் கனவு என்ன?' என்று கேட்கின்றனர். என் கனவு திமுகவை ஆட்சியில் இருந்து வீழ்த்துவது தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்