அவிநாசியில் தி.மு.க. ஆட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள்
அவிநாசி:கடந்த பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கிக் கிடந்த அவிநாசி தொகுதி, தி.மு.க.வின் ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினால் எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுள்ளது, என அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
அவிநாசி - அன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலை 180 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருமுருகன்பூண்டியில் 40 கோடி ரூபாய் மதிப்பில் 'டைடல் பார்க்' கொண்டு வரப்பட்டது.
திருமுருகன்பூண்டி மற்றும் அவிநாசி பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பழைய பேருந்து நிலையத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
அவிநாசி அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய் மதிப்பில் மகப்பேறு பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பில் 3 அறிவுசார் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவிநாசி தேர் வீதிகளில் 1.27 கோடி மதிப்பில் மின் புதைவடங்கள், 30 லட்சம் மதிப்பில் மாஸ்ட் லைட்டுகள் மற்றும் 45 லட்சம் மதிப்பில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் விரல் விட்டு எண்ணக்கூடிய திட்டங்களே வந்தன. முதல்வராக கருணாநிதி இருந்தபோது வித்திடப்பட்ட அத்திக்கடவு - - அவிநாசி திட்டத்திற்குத் தாங்கள் தான் சொந்தக்காரர்கள் என்பது போல அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். 10 வருடங்களாகத் தொகுதி பக்கமே வராத எம்.எல்.ஏ-.வை வைத்திருந்தவர்கள், இப்போது எதைக் கூறி வாக்கு கேட்கிறார்கள்? வெளியூர் வேட்பாளரை நிறுத்திவிட்டு 'அ.தி.மு.க. கோட்டை' எனப் பேசுவதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள்.
வெற்றி பெற்றவுடன், ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத கிராமங்களில் புதிய மருத்துவ நிலையங்கள் உடனடியாக அமைக்கப்படும். கிராமப்புறப் பகுதிகளில் நவீன மகப்பேறு மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.
தொகுதி மக்கள் தங்களை நேரடியாகச் சந்திக்கவும், குறைகளைக் கூறவும் ஒவ்வொரு மாதமும் அனைத்துப் பகுதிகளிலும் 'குறைதீர்ப்பு முகாம்கள்' நடத்தப்படும். என்னை உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருதி, அவிநாசி தொகுதியின் வளர்ச்சிக்கு ஆதர வளிக்க வேண்டும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்